ஷா ஆலம், மே 4- ஷா ஆலம் மாநகரில் சுமார் 111,743.55 வெள்ளி மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதியரை போலீசார் கோல சிலாங்கூர் பண்டார் புஞ்சா ஆலமில் கைது செய்தனர்.
இருபத்தைந்து மற்றும் 23 வயதுடைய அத்தம்பதியர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3.20 மணியளவில் கைது செய்யபட்ட வேளையில் களவு போனதாகக் கூறப்படும் நகையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
வேலையில்லாத அவ்விருக்கும் எந்த குற்றப்பதிவும் இல்லை என்பதோடு போதைப் பொருள் தொடர்பான சோதனையும் எதிர்மறையான முடிவைக் காட்டியது என்று அவர் சொன்னார்.
அவ்விருவரும் குற்றவியல் சட்டத்தின் 380வது பிரிவின் கீழ் விசாரணைக்காக நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஒரு லட்சம் வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள நகைகளைத் திருடிய தம்பதியரை போலீசார் தேடி வருவதாக ஊடகங்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தன.
ஒரு ஆடவரும் பெண்ணும் நகைக்கடை ஒன்றில் கைச்சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளைத் திருடுவதை சித்தரிக்கும் 2 நிமிடம் 26 விநாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.


