கோத்தா பாரு, மே 4- கோல கிராய், சுங்கை கம்போங் கீலாட்டில் நேற்று காணாமல் போன பூர்வக்குடி சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காணாமல் போன அவ்விரு சகோதரர்களும் முறையே 17 மற்றும் 16 வயதுடையவர்களாவர் என்று சுங்கை டுரியன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு கட்டளை அதிகாரி முஹைமி ஹாஷிம் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் இரவு 10.21 மணிக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து ஏழு உறுப்பினர்களுடன் தாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தாக அவர் சொன்னார்.
இரவு 11.00 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வாகனத்தால் அச்சகோதரராகள் நீரில் மூழ்கியதாக கூறப்படும் நடந்த இடத்தை நெருங்க முடியவில்லை. அப்பகுதி உட்புறத்தில் வெகு தொலைவில் இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னிரவு 12.10 மணிக்கு சம்பவ இடத்தை தீயணைப்பு வீரர்கள் அடைந்தனர்.அந்த நேரத்தில் அவ்விடம் இருள் சூழ்ந்தும் மழை பெய்துகொண்டும் இருந்ததால் மீட்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.


