கோத்தா கினபாலு, மே 4- சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 375 குடும்பங்களைச் சேர்ந்த 1,243 பேராக இருந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 472 குடும்பங்களைச் சேர்ந்த 1,541 பேராக உயர்வு கண்டது.
சூக் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்ட வேளையில் அங்கு 405 குடும்பங்களைச் சேர்ந்த 1,340 பேர் ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் கூறியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 668 பேர் டத்தோ எல்ரான் அஜின் மண்டபத்தில் தங்கியுள்ள வேளையில் , சூக் சமூக மண்டபத்தில் 265 பேரும் கெனிங்காவ் நகர 2 தேசிய பள்ளி மண்டபத்தில் 206 பேரும் அன்சிப் தெங்கா கிராம மண்டபத்தில் 117 பேரும் மோலோசோக் டாலிட் கிராம மண்டபத்தில் 84 பேரும் அடைக்கலம் நாடியுள்ளதாக அது அறிக்கை ஒன்றில் கூறியது.
இதற்கிடையில், பியூபோர்ட்டில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 175 பாதிக்கப்பட்டவர்கள் செலகான் வெள்ள நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர். மேலும் சிபித்தாங் மாவட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் பாத்தாங் பெரம்பா தேசிய பள்ளி மண்டபத்தில் அடைக்கலம் நாடினர்.
வெள்ளம் காரணமாக பியூபோர்ட்டில் 10 கிராமங்கள், சூக் மற்றும் சிபித்தாங்கில் தலா ஒன்பது கிராமங்கள் உள்பட 28 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


