கிள்ளான், மே 4- கிள்ளான் ஆற்றை மாசுபடுத்தும் செயல்களைத் தடுப்பதில் கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. மாறாக, அத்தகையச் செயலில் ஈடுபடும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக அது கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
இதுவரை எடுக்கப்பட்ட அத்தகைய நடவடிக்கைகளில் இந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட லோரியை ஒரு மாதத்திற்கு பறிமுதல் செய்ததும் அடங்கும் என்று டத்தோ அப்துல் ஹமீட் ஹூசைன் கூறினார்.
ஊராட்சி மன்றச் சட்டத்தின் (சட்டம் 171) கீழ் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
இருப்பினும், கிள்ளான் ஆற்றில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன லோரிகளை மாநகர் மன்றம் ஒரு மாதத்திற்கு பறிமுதல் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள கம்போங் சுங்கை ஊடாங் மீனவர் படகுத் துறையில் நடைபெற்ற ரிவர் ரேஞ்சர் 2.0 நதி சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றப் பின்னர் நிருபர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிள்ளான் ஆற்றில் தூய்மை தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கைகள் குறித்து புகாரளிப்பதன் மூலம் குடியிருப்பாளர்கள் அரச மாநகர் மன்றத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


