ஷா ஆலம், மே 4- ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் வட்டார மக்களின் ஆதரவுடன் 1,000 சுற்றுலாத் தூதர்களை உருவாக்க தொகுதி சேவை மையம் திட்டமிட்டுள்ளது.
முதன் முறையாக அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் ஆக்ககரமான முறையில் ஊக்குவிப்பு வியூகங்களை கையாள்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சமூக ஊடகத்துறையில் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார்.
செர்டாங் சுற்றுலா தூதர் திட்டத்தை அமல்படுத்துவதற்காக நாங்கள் போஸ்மேன் கல்விக்கூடத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்நோக்கத்தின் அடிப்படையில் டிக்டாக்கில் குறும் படங்களை தயாரிப்பதற்கான பயிற்சிகளை ஆயிரம் பேருக்கு வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியின் வாயிலாக சுற்றுலாத் தூதர்கள் செர்டாங் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா மையங்களை சுற்றுப்பயணிகள் மத்தியில் பிரபலபடுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என அவர் சொன்னார்.
ஸ்ரீ கெம்பாங்கான், போஸ்ட்மேன் கல்விக்கூடத்தில் நேற்று குறும்படத் தயாரிப்பு பயிற்சி மற்றும் செர்டாங் சுற்றுலாத் தூதர் நியமன நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த முதல் கட்ட பயிற்சித் திட்டத்தில் 50 பங்கேற்பாளர்கள் பங்கு கொண்டனர். படைப்பாற்றல் உள்ளடக்கங்களைத் தயாரிப்பது, புகைப்படக்கலை, மற்றும் இண்ட்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் சமூக தளங்களை பயன்படுத்துவது தொடர்பான நுட்பங்கள் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன.
இருபது முதல் 50 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 20 பயிற்சிகளை இவ்வாண்டு நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஆண்டு இறுதிக்குள் 1,000 பேருக்கு பயிற்சி வழங்க முடியும் எனத் நம்புவதாகவும் சீயூ கி கூறினார்.


