புத்ராஜெயா, மே 2 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கொசோவோ நாட்டின் உயரிய குடிமகன் விருதான 'ஆர்டர் ஆஃப் இன்டிபென்டன்ஸ்' விருதை அந்நாட்டு அதிபர் டாக்டர் விஜோசா உஸ்மானி சத்ரியு இன்று வழங்கினார்.
மலேசியாவிற்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள உஸ்மானி, புத்ரா பெர்டானாவில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பிரதமருக்கு இந்த விருதை வழங்கினார்.
முன்னதாக, அதிபர் உஸ்மானிக்கு மேஜர் முஹம்மது ஃபிக்ரி சேனன் தலைமையிலான ராயல் மலாய் படைப்பிரிவின் முதல் பட்டாளத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் 103 உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பு உட்பட அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
இந்த விருது நாட்டின் சுதந்திரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர்களுக்கு கொசோவோ அரசாங்கத்தால் வழங்கப்படும் மிக உயர்ந்த அங்கீகாரமாகும் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
கொசோவோவின் தேச அந்தஸ்து மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சிக்கு மலேசியாவின் அசைக்க முடியாத ஆதரவையும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உறுதியான அர்ப்பணிப்பையும் இந்த விருது அங்கீகரிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
கொசோவோவின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தில் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவிக்கு இந்த விருதை கொசோவோ அரசாங்கம் வழங்கும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மலேசியா கொசோவோவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கொசோவோவை முதலில் அங்கீகரித்த ஆசிய நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி அரசதந்திர உறவுகள் முறையாக நிறுவப்பட்டன. 2024 ஆம் ஆண்டில் மலேசியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் 28.55 மில்லியன் வெள்ளியை எட்டியது.
மலேசியாவுக்கான அக்குடியரசின் ஏற்றுமதி 25.92 மில்லியன் வெள்ளியாகவும் இறக்குமதி 2.63 மில்லியன் வெள்ளியாகவும் உள்ளது.
மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் செம்பனை எண்ணெய், மின் மற்றும் மின்னணு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கும். அதே நேரத்தில் கொசோவோவிலிருந்து முக்கியமாக மூலப்பொருட்கள் மற்றும் பகுதி விலையுயர்ந்த கற்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.


