ஷா ஆலம், மே 2- இவ்வாண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டினர்
உள்பட சுமார் 20 லட்சம் சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை
புரிந்துள்ளனர்.
மாநில அரசின் சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான டூரிசம் சிலாங்கூர்
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்து வரும் பல்வேறு விளம்பர
நடவடிக்கைகளின் வாயிலாக இந்த எண்ணிக்கை மேலும் உயர்வு காணும்
என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலாத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
சுற்றுப்பயணிகள் தொடர்பான துல்லியமான எண்ணிக்கைகாக நாங்கள்
காத்திருக்கிறோம். சுமார் 20 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர்
மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளதை முன்கணிக்கப்பட்ட தரவுகள்
காட்டுகின்றன. சுற்றுப்பயணிகள் வருகை தொடர்பான தரவுகளை மூன்று
மாதத்திற்கு ஒரு முறை வெளியிட நாங்கள் உத்தேசித்துள்ளோம் என்று
அவர் சொன்னார்.
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு (டிஎம்எஸ்2025)
இயக்கத்தை முன்னிட்டு பல்வேறு பிரிவுகளில் கவர்ச்சிகரமான
நிகழ்வுகளை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு இங்குள்ள ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற
2025 மெகா உணவு திருவிழா நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இந்த டிஎம்எஸ்2025 இயக்கத்தை முன்னிட்டு கணிக்கப்பட்டுள்ள 40
விழுக்காட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் இலக்கை ஆண்டு இறுதிக்குள்
அடைய முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் இங் சொன்னார்.
இங்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டுச் சுற்றுப்பயணியும் சராசரி 4,068
வெள்ளியைச் செலவிடுகின்றனர். அதே சமயம் உள்நாட்டுச்
சுற்றுப்பயணிகள் செலவிடும் தொகை 668 வெள்ளியாக உள்ளது.
சிலாங்கூர் மாநில பொருளாதாரத்தை மேலும் உயர்த்த எதிர்காலத்தில்
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் செலவிடும் தொகையை சராசரி 5,000
வெள்ளிக்கும் மேல் உயர்த்த நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்
அவர்.
இவ்வாண்டு அமல்படுத்தப்பட்டுள்ள சிலாங்கூருக்கு வருகை தாருங்கள்
இயக்கத்தின் வாயிலாக எண்பது லட்சம் சுற்றுப்பயணிகளையும் அதன்
மூலம் 117 கோடி வெள்ளியையும் ஈட்ட சிலாங்கூர் அரசு
திட்டமிட்டுள்ளது.


