ஷா ஆலம், மே 2- புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய்
வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு முதல்
மூன்று மாதங்களுக்கான வாடகைத் தொகையை வழங்கும் பணி அடுத்த
வாரம் முற்றுப் பெறும்.
வங்கிக் கணக்கை வழங்காதது உள்பட ஆவணங்கள் முழுமையாக
இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் வாடகைத்
தொகையை பெற இயலாத நிலையில் இருப்பதாக வீடமைப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
ஸ்கேம்மர் எனப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்த அச்சம்
காரணமாக பலர் வங்கிக் கணக்கை வழங்கத் தயக்கம் காட்டுகின்றனர்.
எனினும், பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினர் மூன்று மாத
வாடகையைப் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும்
நம்பிக்கை ஏற்பட்டு வங்கிக் கணக்கைத் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்
என்று அவர் சொன்னார்.
வாடகைத் தொகையை வழங்கும் பணி அடுத்த வாரம் முற்றுப் பெறும்
என எதிர்பார்க்கிறோம். பணத்தை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்
கணக்கில் சேர்ப்பதற்கு முன்பாக அனைத்து ஆவணங்களையும் மாவட்ட
அலுவலகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற 2025
சிலாங்கூர் மெகா உணவுத் திருவிழா நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வீட்டு வாடகைத் தொகையை வழங்குவதற்கு 27 லட்சத்து 30 ஆயிரம்
வெள்ளி ஒதுக்கபட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
முன்னதாகக் கூறியிருந்தார்.
மொத்தம் 455 குடும்பங்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கான வாடகைத்
தொகையாக தலா 6,000 வெள்ளி வழங்கப்படும் என்று அவர்
குறிப்பிட்டிருந்தார்.
முதல் கட்டமாக 214 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மூன்று மாத
வாடகையைப் பெற்றதாகக் கூறிய அவர், மற்றவர்கள் அடையாளக் கார்டு
உள்பட முறையான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக காத்திக்கின்றனர்
என்றார்.


