குவாந்தான், மே 2- ரொம்பின், புக்கிட் இபாம் முவாட்ஸாம் ஷா
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலுள்ள கானோ ஆற்றில் சட்டவிரோதமாக
இரும்பு சுரங்க நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரு
வங்காளதேசிகள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் பி.ஜி.ஏ. எனப்படும்
பொது நடவடிக்கைப் பட்டாளத்தின் ஏழாவது படைப்பிரிவு மேற்கொண்ட
சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பி.ஜி.ஏ. தென்கிழக்கு
படைப்பிரிவு தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.
இச்சோதனையின் போது இரும்பு சுரங்க நடவடிக்கையை
மேற்கொள்வதற்கான உரிய அனுமதி ஆவணங்களை காட்டத் தவறியதைத்
தொடர்ந்து இரு வங்காளதேசிகள் உள்நாட்டவரான அந்த சுரங்க
உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர் என்று அது குறிப்பிட்டது.
அங்கு வேலை செய்து வந்த இரு வங்காளதேசிகளும் முறையான
அடையாள ஆவணங்களைக் கொண்டிராத து இச்சோதனையில்
கண்டறியப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
நாற்பது முதல் ஐம்பது வயது வரையிலான அம்மூவரும் 2001ஆம் ஆண்டு
மாநில கனிம வளச் சட்டத்தின் 159 மற்றும் 137(ஏ) பிரிவு மற்றும்
1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 55பி, 6(1)(சி) பிரிவுகளின் கீழ
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .
இந்த நடவடிக்கையில் இரும்பு தோண்டும் நடவடிக்கைக்கு
பயன்படுத்தப்பட்ட 12.5 லட்சம் வெள்ளி மதிப்புள்ள இயந்திரங்களும்
பறிமுதல் செய்யப்பட்டன.


