சியாமென், மே 2 - சுடிர்மான் கிண்ண பூப்பந்து போட்டியில் சி குழுவுக்கான இறுதி ஆட்டத்தில், ஜப்பானிடம் 2-3 என்ற நிலையில் மலேசியா தோல்வியடைந்தது.
இதில் மலேசியாவின் கலப்பு இரட்டையரான சென் தாங் ஜி -டோ ஈ வெய், ஜப்பானின் ஹிரோகி மிடோரிகாவா-அரிசா இகராஷி இணையினரை 21-19, 21-18 என்ற புள்ளிகளில் தோற்கடித்து மலேசியாவுக்கு முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தனர்.
பிற்கு, இரண்டாம் ஆட்டத்தில் களமிறங்கிய தேசிய ஆடவர் ஒற்றையரான லியொங் ஜூன் ஹொ 21-8, 13-21, 21-18 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று மலேசியாவை முன்னணி வகிக்கச் செய்தார்.
இருப்பினும், அடுத்த மூன்று ஆட்டங்களிலும் தேசிய மகளிர் ஒற்றையர் கொ ஜின் வெய், தேசிய ஆடவர் இரட்டையர் கொ சி ஃபெய் நுர் இசுடின் மற்றும் மகளிர் இரட்டையர் பெர்லி தான் - எம்.தினா ஆகியோர் தோல்வியைப் பதிவு செய்தனர். இதன் வழி அவர்கள் ஜப்பானின் வெற்றிக்கு வழிவிட்டனர்.
சீனா சியாமெனில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் தோல்வி அடைந்தாலும், சி குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்ததால், மலேசியாக் காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.
-பெர்னாமா


