சிரம்பான், மே 2- இங்குள்ள தாமான் கெப்பாயாங்கில் நேற்று மேற்கொண்ட
அதிரடி நடவடிக்கையில் எட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணைக் கைது
செய்ததன் மூலம் ‘கேங் ஆ கிட்‘ எனப்படும் இணைய முதலீட்டு மோசடிக்
கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இருபத்தொன்று முதல் 35 வயது வரையிலான அந்த ஒன்பது பேரையும்
கைது செய்ததன் வழி அவர்களிடமிருந்து 33 கைப்பேசிகள், ஒன்பது
மடிக்கணினிகள் ஏழு கார்கள் மற்றும் 14 குறிப்பு புத்தகங்களை தாங்கள்
கைப்பற்றியதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
அகமது ஸப்பிர் முகமது யூசப் கூறினார்.
இக்கும்பல் கடந்த ஜனவரி மாதம் முதல் இங்குள்ள ஒரு வீட்டை
தளமாகக் கொண்டு பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக இல்லாத
முதலீட்டுத் திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது என அவர்
சொன்னார்.
இங்கு தொலைபேசி அழைப்பு பணியாளர்களாக வேலை செய்வதற்கு
மாதம் 3,000 வெள்ளியை இக்கும்பல் சம்பளமாக வழங்கிய வந்துள்ளதோடு
வேலியிடப்பட்ட அந்த குடியிருப்பை அலுவலகமாகவும் ஊழியர்கள்
தங்கும் விடுதியாகவும் பயன்படுத்தி வந்துள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி
இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கு பொது மக்களை தேடும்
பணியில் இக்கும்பல் உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று அவர்
சொன்னார்.
வாடிக்கையாளர்களை தங்கள் வசப்படுத்துவதற்காக இந்த முதலீட்டின்
வழி அதிகம் லாபம் பெறலாம் என்று இக்கும்பல் உறுப்பினர்கள் ஆசை
வார்த்தைகளை கூறிய வந்துள்ளனர். முதலீடுகளைச் செய்தப் பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி லாபத்தை தர மறுக்கும் இக்கும்பல்
பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்பைத் துண்டித்து
கொள்ளும் என்றார் அவர்.
இந்த கும்பலின் நடவடிக்கையில் மலேசியர்கள் குறிப்பாக நெகிரி
செம்பிலானைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படாத போலும் குறுகிய காலத்தில்
அதிக லாபத்தைப் பெறலாம் என ஆசை வார்த்தை கூறும் இணைய
முதலீட்டுத் திட்டங்களை எளிதில் நம்பிவிட வேண்டாம் என அவர் பொது
மக்களை கேட்டுக் கொண்டார்.


