ஷா ஆலம், மே 2- கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பை
மோதியதில் அதில் பயணம் செய்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து கோலாலம்பூர்-சிரம்பான் நெடுஞ்சாலையின்
பலாக்கோங் வெளியேறும் தடத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.
காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட அவர்களை தீயணைப்பு வீரர்கள்
மீட்டனர். இருப்பினும், அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டதை
சம்பவ இடத்திலிருந்து மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்து தொடர்பில் இன்று அதிகாலை 5.57 மணிக்கு தங்களுக்கு
தகவல் கிடைத்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கை அதிகாரி ஷாஹ்ரும் டின் கூறினார்.
சுங்கை பீசி மற்றும் புக்கிட் ஜாலீல் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10
பேர் கொண்ட குழுவினர் இரு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு
விரைந்ததாக அவர் சொன்னார்.
பத்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள்
டோயோட்டா வியோஸ் ரகக்கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து
நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் தடத்தின் சாலைத் தடுப்பை மோதி
விபத்துக்காகியுள்ளதைக் கண்டனர்.
காரின் இடிபாடுகளில் மூவர் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் சுமார் ஒரு
மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் அவர்களை
மீட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்தில் இருந்த
சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர் என்று
அவர் தெரிவித்தார்.
இந்த மீட்பு நடவடிக்கை காலை 7.29 மணியளவில் முடிவுற்றதாகக் கூறிய
அவர், இறந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காகக் காவல்
துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்றார்.


