தமிழர்கள் வாய் இல்லா பூச்சிகள், கடுமையான உழைப்பாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி பிரஞ்சுக்காரர்களும் உலகத்தில் இருந்த பல காடுகளையும், தீவுகளையும் திருத்தி நாடாக்க அவர்களை கொண்டு சென்றுள்ளனர். இதற்கு சான்றாக இன்றளவும் விளங்குவது உலகளவில் பல நாடுகளில் வாழும் தமிழ் சமுதாயம் ஆகும்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்தியர்களில் பெரும் பகுதியினர் தமிழர்கள் ஆவர். அவர்கள் நீண்ட காலமாகக் கட்டி காத்த கலாச்சாரம், உணவு, மொழி, சமயம் தவிர்த்து
புதியதாக ஒன்றை மலாயா இந்தியர்கள் கற்றுக்கொண்டனர். பின்னாளில் அது அவர்களின் கலாச்சாரங்களில் ஒன்றாக வளர்ந்தது. அது தான் தொழிலாளர்களின் உரிமைக்குரல் அல்லது யூனியன் (தொழிற் சங்கம்) என்பதாகும்.
ஆக, இது இன்றளவும் மலேசிய இந்தியர்களின் அடையாளமாக உள்ளது. நாம் கட்டி காத்த கலாச்சாரம், உணவு, மொழி, சமயம் ஆகியவற்றுடன் 5வது கலாச்சாரமாக தொழிற்சங்கம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. இந்நாட்டில் இந்தியர்களின் அழிக்க முடியாத பஞ்ச அம்சங்களில் ஒன்றாக தொழிற் சங்கம் விளங்குகிறது.
இன்று தொழிற் சங்கம் இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் அடையாளமாக மலேசியாவில் விளங்குகிறது. தொழிற்சங்கம் இந்நாட்டு தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களின் கடுமையான சுரண்டலுக்கும் சித்திரவதைக்கும் எதிராகவும் பல்வேறு வேற்றுமைகளினால் பிரிந்துக் கிடந்த தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தவும் அவர்களுக்கு உரிமை குரல் எழுப்ப கற்றுக்கொடுத்தது.
இருப்பினும் மலேசிய இந்தியர்கள் தொழிலாளர்களாக உரிமைக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றதைவிட போராடி இழந்ததுதான் ஏராளம்.
இன்றளவும் நினைவுகூறப்படும் சாதனைகளாகப் பள்ளிகள், ஆலயங்கள் தொழிலாளர் சேமநிதி, தொழிலாளர் நலத் திட்டங்கள் மற்றும் ஊதிய சமநிலை ஆகியவை அடங்கும். அதனுடன் இத்தேச பாட்டாளி சமுதாயத்திற்கு தொழிலாளர் தினத்தை பொது விடுமுறையாக்கிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தையும் பெற்று தந்தது தொழிற்சங்கம்.
இவ்வேளையில் நம் நாட்டு தொழிலாளர்கள் பெற்றுள்ள பல அனுகூலங்களுக்கும், மே 1ஆம் தேதி உலகப் பாட்டாளிகள் தின பொது விடுமுறைக்கும் வித்திட்ட போராளிகள் தங்கள் இன்னுயிரை நாட்டுக்கும், கொள்கைக்கும், தொழிலாளர் உரிமைக்கும் அர்பணித்துள்ளனர்.இவ்வேளையில் அவர்களை நினைவு கூறாவிட்டால், நாம் நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுவோம்.
அந்த வரிசையில் எண்ணிக்கையில் அடங்காத பெயர்களை இங்கே குறிப்பிட வேண்டும். பல தொழிற்சங்கவாதிகளின் பெயர்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், அன்றே தொழிலாளர் ஒற்றுமைக்கு மட்டுமின்றி நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அந்நிய ஆட்சியாளர்களின் கொடுமையை எதிர்த்த தொழிற்சங்கவாதிகளை கொச்சைப் படுத்தும் வகையில் அவர்களை கமினிஸ்டு தீவிரவாதிகள் என குற்றஞ்சாட்டினர். தூக்கு மேடையையும் அவர்களுக்கு பரிசாக தந்தது ஆங்கிலேயரின் பாசிச ஆட்சி.
தங்கள் இன்னுயிரை இம்மண்ணுக்கு அர்பணித்த மாவீரர் எஸ் ஏ கணபதி, பி. வீர சேனன் போன்றவர்கள் என்ரென்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள். இன்றளவும் நம் மேம்பாட்டுக்கு முன்னேற்றத்திற்கு ஒற்றுமைக்கு மட்டுமின்றி இந்நாட்டின் தொழிலாளர்களின் செம்மையான வாழ்வுக்கும் தொழிற் சங்கம் கைகொடுத்து வருகிறது.
இந்நாட்டில் நம் முன்னோர்கள் ஆங்கிலேயர் முதலாளிகளின் கொடுமையான செயல்களாலும், பாகுபாடு நிறைந்த ஊதிய முறை, கடுமையான தொழில் முறைகளாலும் பெரும் மனப் போராட்டத்தில் இருந்தனர். அதுவே அவர்களை ஆரம்பத்தில் தொழிற்சங்கம் அமைக்க தூண்டியது. ஆனால் அதற்கும் பல தடைகளை விதித்தது அன்றைய அந்நிய ஆட்சி. பின், இந்திய தொழிலாளர்கள் தேசிய அளவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக திரும்பினர்.
அந்த போராட்டம் பெரிய அளவில் விரிவடைந்து இங்கே இந்திய தேசிய ராணுவம் அமைக்கவும், ஜப்பானியர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல் படவும் இந்தியர்களை தூண்டியது. அதுவே ஆங்கிலேயர்களை இந்த நாட்டிலிருந்து விரட்டவும் காரணமானது. ஆனால் விரைவில் நிலை மாறியது.
1944 ஆண்டில் பர்மா போர் முனையில் மலேசிய இந்தியர்களின் முழு முயற்சியில் அமைக்கப்பட்ட இந்திய தேசிய படையின் தோல்வியும் 1945ல் ஜப்பானிய படைகளின் தோல்வியும் இந்நாட்டு இந்தியர்களுக்கு பெரிய சவலாக அமைந்தது.
மாலாயாவில் மீண்டும் ஆட்சி அமைத்த ஆங்கிலேயர்களின் கொடுமைகளில் தோட்டத் தொழிலாளர்கள் எண்ண முடியாத துன்பங்களை எதிர்கொண்டனர். அதே வேளையில், முன்பு இந்நாட்டில் ஜப்பானியர்களுக்கு உதவியாக இருந்த காரணத்திற்காக இந்தியர்கள் களை எடுக்கப்பட்டனர். அவர்களீல் பலர் சிறையிடப்பட்டனர், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் மற்றும் ஆங்கிலேயர்களின் கொடுமையான செயல்கள் வழி உயிர் இழந்தனர்.
இதனால் போராட்ட குணங்கொண்ட தொழிலாளர்கள் பலர் ஒன்றுப்பட்டு பலமான தொழிற்சங்கங்களை அமைத்தனர். அதில் முக்கியமானது அகில மலேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகும். அப்பொழுது அதன் தலைவராக எஸ்.ஏ கணபதியும், சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர் சங்க பெடரேசன் உதவித் தலைவராக இருந்த பி.வீர சேனன் , சிலாங்கூர் தொழிற்சங்க பெடரேசன் உதவித் தலைவர் எஸ். மோகன், பேராக் ரப்பர் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர் ஜி. பாலன் போன்ற தொழிற்சங்க வாதிகள் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்கள்.
ஆங்கிலேயர்கள் பிரித்தாலுவதில் கைத்தேர்ந்தவர்கள். அவர்கள் தொழிலாளர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தவும், தொழிலாளர்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தும் மிதவாத தொழிற்சங்கங்களை உருவாக்குவதிலும் அதற்கான தலைவர்களை முன்னிலை படுத்துவதிலும் அதிக சிரத்தை காட்டினர்.
அதே வேளையில் அவசரக் காலத்தை பயன்படுத்தி எஸ் ஏ.கணபதி, ஆர் ஜி. பாலன் போன்றவர்களை கைது செய்தும், பி.வீர சேனனை சுட்டும் காயப்படுத்திய வேளையில், பிறகு எஸ் ஏ.கணபதியை புடு சிறையில் தூக்கிட்டு கொன்றனர்.
அதன் பின் பி.பி நாராயணன், வி எம்.என் மேனன், எம் ஆர் ராஜகோபால், போன்ற பலர் தொழிற்சங்கத்தில் அடையாளங்காண பட்டாலும், நாட்டின் சுதந்திர காலத்திலும் அதன் பின்பும் டாக்டர் வீ. டேவிட், கோவிந்தசாமி ராஜசேகர், எம். பி ராஜகோபால், எக்ஸ் ஈநாதன், போன்ற இந்தியர்களின் தொழிற்சங்க ஆளுமை ஆங்கிலேயர்கள் தொடங்கி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது காலம் வரை கடுமையாக ஒடுக்கப்பட்டது. அதன் விளைவாக, மக்களுக்கு இன்றுவரை உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை என்ற குறைபாடு நாட்டில் நிலவுகிறது.
மலேசியாவின் தொழிற்சங்க போராட்டங்களில் இந்தியர்களிடையே ஏற்பட்ட தொய்வு சுதந்திரத்திற்கு பின்னும் தொடர்ந்தது அதன் பிம்பம் தொழிற்சங்கத்தில் மட்டுமின்றி சுதந்திர மலேசிய அரசியலிலும் இந்நாள் வரை தொடர்கிறது.


