ரமல்லா, மே 2- கடந்த 17 மாதங்களாக லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள்
சம்பளம் மறுக்கப்பட்ட நிலையில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் பாலஸ்தீன
பொது தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷாஹேர் சஹாட்
கூறினார்.
பாலஸ்தீன சமூகத்தின் மத்தியில் வேலையில்லாப் பிரச்சனை அபரிமிதமாக உயர்வு கண்டு வருவதாகக் கூறிய அவர், வேலையில்லாதோர் எண்ணிக்கை தற்போது 570,000 பேராக உயர்ந்துள்ளது என்றார்.
இது தவிர கடந் 2023 அக்டோர் மாதத்திற்கு பிறகு ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதோடு
காணாமலும் போயுள்ளனர். மேலும், பிழைப்புக்கான வழியைத் தேடிய
குற்றத்திற்காக இஸ்ரேலிய துருப்புகளால் பலர் அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக வேலை இழந்து வருமானத்தையும்
இழந்த பலர் பொருளாதாரத் தேவையை ஈடு செய்வதற்காக தங்கள்
வசமுள்ள பொருள்களையும் விற்று வருகின்றனர் என்று அவர் கூறினார்.
உலகின் பல நாடுகளில் சமூக மற்றும் காப்புறுதி பாதுகாப்புகளை
தொழிலாளர்கள் பொறுகின்றனர். ஆனால், பாலஸ்தீனத்தில் சுமார் 89
விழுக்காட்டுத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்பட எந்த சமூக
பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்றார் அவர்.
பாலஸ்தீனத்தின் இவ்வாண்டிற்கான தொழிலாளர் தின கருப்பொருளாக
ஏழ்மை, வறுமை, பட்டினி என்ற சுலோகம் பயன்படுத்தப்படுகிறது என்று
அவர் சொன்னார்.
பாலஸ்தீனத் தொழிலாளர்கள் மாதந்தோறும் 37 கோடியே 12 லட்சம்
வெள்ளி பொருளாதார இழப்பை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர்
குறிப்பிட்டார்.


