ஜோர்ஜ் டவுன், மே 2 - ஒரு வாரத்தில் பினாங்கில் மூன்று மோசடி சம்பங்கள் பதிவாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமை, ஒரு தனியார் நிறுவனத்தின் 70 வயதான கணக்கியல் மேலாளர் இணைய முதலீட்டு மோசடியில் 1.365 மில்லியன் ரிங்கிட் இழந்துள்ளார். பின், அவர் இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
அதே நாளில், 62 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் இல்லாத முதலீட்டு மோசடியில் சிக்கி 229,800 ரிங்கிட் ஏமாந்துள்ளார்.
ஆகக் கடைசியாக இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை மேற்பார்வையாளர் 558,000 ரிங்கிட் இழந்துள்ளார். இது தொடர்பாக 57 வயதான அந்நபரிடமிருந்து பினாங்கு தென்மேற்கு வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைக்கு புகார் கிடைத்திருப்பதாக மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ ஹ்மசா அமாட் தெரிவித்தார்.
"AI முதலீடு" என்ற பெயரில் முகநூல் வழியாக சீனாவிலிருந்து நிறுவனப் பங்குகளை வாங்குவது தொடர்பான இணைய முதலீட்டு மோசடியில் அந்நபர் பாதிக்கப்பட்டாக ஹம்சா கூறினார். இந்த விவகாரம் குறித்து தற்போது தண்டனைச் சட்டத்தின் 420 இன் பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட நபர் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 29 முறை பணப் பரிவர்த்தனை செய்துள்ளார். ஏப்ரல் 24 முதல் 25 ஆம்தேதிவரை பாதிக்கப்பட்டவரின் கணக்கிற்கு 1.2 மில்லியன் ரிங்கிட் லாபத்தை மாற்றுவதாக சந்தேக நபர் உறுதியளித்திருந்தார்.
ஆனால், பணம் எதுவும் வரவில்லை என்று உணர்ந்ததைத் தொடர்ந்து அந்த மேற்பார்வையாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


