புத்ராஜெயா, மே 2 - மலேசியாவிற்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள கொசோவோ அதிபர் டாக்டர் விஜோசா ஒஸ்மானி சத்ரியுவுக்கு இன்று பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
காலை 9.00 மணிக்கு புத்ரா பெர்டானா வந்தடைந்த அதிபரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
பின்னர் மேஜர் முகமமது ஃபிக்ரி சேனன் தலைமையிலான ராயல் மலாய் படைப்பிரிவின் (சடங்குப்பூர்வ) முதல் பட்டாலியனைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் 103 உறுப்பினர்கள் வழங்கிய மரியாதை அணிவகுப்பை உஸ்மானி பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப், அமைச்சரவை அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்வுக்குப் பிறகு உஸ்மானி விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் அவர் பிரதமர் அன்வாருடன் இருதரப்பு சந்திப்பில் கலந்து கொண்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மலேசியா கொசோவோவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கொசோவோவை முதலில் அங்கீகரித்த ஆசிய நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி அரசதந்திர உறவுகள் முறையாக நிறுவப்பட்டன. 2024 ஆம் ஆண்டில், மலேசியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் 28.55 மில்லியன் வெள்ளியை எட்டியது.
மலேசியாவுக்கான அக்குடியரசின் ஏற்றுமதி 25.92 மில்லியன் வெள்ளியாகவும் இறக்குமதி 2.63 மில்லியன் வெள்ளியாகவும் உள்ளது.
மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் செம்பனை எண்ணெய், மின் மற்றும் மின்னணு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கும். அதே நேரத்தில் கொசோவோவிலிருந்து முக்கியமாக மூலப்பொருட்கள் மற்றும் பகுதி விலையுயர்ந்த கற்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.


