ஷா ஆலம், மே 2 - பல்வேறு வகையான உணவுகளை முன்னிலைப்படுத்தும் 2025 சிலாங்கூர் மெகா உணவு திருவிழா மாநிலத்திலுள்ள தொழில்முனைவோரின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த உதவும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் மலேசியாவின் முதன்மை
உணவு சுற்றுலா மையம் என்ற நிலையை சிலாங்கூர் வலுப்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.
பல்வேறு அருசுவை உணவுகளுக்கு பெயர் பெற்ற இடமாக மட்டும் சிலாங்கூர் விளங்கவில்லை. மாறாக, இங்கு வழங்கப்படும் உணவு வகைகள் நமது சமூகத்தின் காலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
உணவு என்பது ருசிப்பதற்கான ஒரு பண்டமாக மட்டுமல்லாது உள்ளுர்
சமூகத்தின் அடையாளமாகவும் வாழ்வியல் கூறாகவும் விளங்குகிறது.
மேலும், இத்தகைய உணவு திருவிழாக்களை ஏற்பாடு செய்வதன் மூலம்
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் பொருளாதாரத்தை
வலுப்படுத்துவதற்குரிய வாய்ப்பும் கிட்டுகிறது என அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் மெகா உணவுத்
திருவிழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினார்.
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு இயக்கத்தை முன்னிட்டு
ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மெகா உணவுத் திருவிழாவில் 100க்கும்
மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கு கொண்டுள்ளனர். இந்த விழாவை
முன்னிட்டு உணவுக் கண்காட்சி, கலைநிகழ்ச்சி மற்றும் வெப்பக் காற்று
பலூன் சாகசம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 30,000 வருகையாளர்களை இலக்காகக் கொண்ட இந்த உணவுத்
திருவிழா நிகழ்வில் கலாச்சாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
பொர்ஹான் அமான் ஷா மற்றும் டூரிசம் சிலாங்கூர் தலைமை
செயல்முறை அதிகாரி சுவா யீ லிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.


