நியூயார்க், மே 2 - ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை இவ்வாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில்
80 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்தது.
அதிகரித்து வரும் இந்த நெருக்கடி நிலைக்கு இஸ்ரேலிய முற்றுகை மற்றும் எல்லைக் கடப்புகள் மூடப்படுவது ஆகியவை காரணமாகும் எனக் கூறிய பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா), இது அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் தடையாக உள்ளது என்றது.
ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளில் 92 விழுக்காட்டினரும் அவர்களின் தாய்மார்களும் குறைந்தபட்ச அடிப்படை சத்துணவைப் பெறுவதில்லை என்றும் இதனால் அவர்கள் நீண்டகால உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் அந்த ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்தது.
காஸா மக்கள் தொகையில் 65 விழுக்காட்டினருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. இது ஏற்கனவே நிலவிவரும் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது என்று அந்த அறிக்கை கூறியது.


