ஈப்போ, மே 2- தைப்பிங், சிம்பாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில்
நிகழ்ந்த கடை உதவியாளரின் படுகொலையில் தொடர்புடையவர் என
சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீசார் நேற்று முன்தினம் கைது
செய்தனர்.
தைப்பிங் அவுலோங்கில் காலை மணி 11.00 அளவில் அந்த ஆடவர் கைது
செய்யப்பட்ட வேளையில் 19 வயதுடைய அந்த இளைஞரை கொலை
செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பாராங் கத்தி ஒன்றும்
மீட்கப்பட்டதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
நாசீர் இஸ்மாயில் கூறினார்.
நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் அந்த இளைஞர் இரத்த வெள்ளத்தில்
கிடப்பதைக் கண்ட பொது மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல்
தெரிவித்ததாக அவர் சொன்னார்.
இந்த புகாரைத் தொடர்ந்து துரித நடவடிக்கை மேற்கொண்ட தைப்பிங்
மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் புலனாய்வுக் குழுவினர் சம்பவம்
நிகழ்ந்த 24 மணி நேரத்தில் சந்தேக நபரைக் கைது செய்தனர் என்று அவர்
குறிப்பிட்டார்.
அந்த சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர்
மோர்பின் வகை போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது
கண்டறியப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த படுகொலைக்கு பொறாமை காரணமாக இருந்தது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 40 வயதுடைய
சந்தேகப் பேர்வழிக்கு நான்கு முந்தையக் குற்றப்பதிவுகளும் உள்ளன
என்றார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்
கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும்
கூறினார்.


