கோலாலம்பூர், மே 1 - கம்போங் பாருவில் உள்ள பிந்தாசான் ராஜா மூடா மூசா 4 இல் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று வீடுகள் எரிந்து நாசமாயின.
எனினும், இச்சம்பவத்தின் போது வீடுகளிலிருந்த 12 குடியிருப்பாளர்களும் தெய்வாதீனமாக உயிர்த் தப்பினர்.
இந்த தீவிபத்து தொடர்பில் கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு காலை 9.39 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு கட்டளை அதிகாரி மூத்த உதவி தீயணைப்புத் தலைவர் முகமது ரிடுவான் அக்யார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சம்பவ இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியது.
காலை 9.50 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்புப் படையினர் 40 x 70 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று நிரந்தர வீடுகளில் தீ ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
இந்த தீ விபத்தில் இரண்டு குடியிருப்புகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. ஒரு வீட்டிற்கு 40 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காலை 10.13 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு குறித்து தீயணைப்புத் துறையின் தடயவியல் பிரிவு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.


