இஸ்கந்தர் புத்ரி, மே 1- கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் பள்ளி வேனில் விடப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பாதிக்கப்பட்ட அச்சிறுவன் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் அந்த பள்ளி வாகனத்தில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக இஸ்கந்தர் புத்ரி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி எம். குமரேசன் கூறினார்.
தாமான் புக்கிட் இண்டாவில் உள்ள ஒரு பாலர் பள்ளியில் பயின்று வந்த அச்சிறுவன் காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு முன்னால் மாணவர்களை வேன் ஓட்டுநர் இறக்கிவிட்ட போது வேனிலேயே தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
உயிரிழந்த அச்சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அச்சிறுவனின மரணம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளி வேனின் ஓட்டுநரான 56 வயது நபரை தாமான் புக்கிட் இண்டாவில் பிற்பகல் 2.40 மணியளவில் போலீசார் கைது செய்ததாக அவர் கூறினார்.
அந்த நபருக்கு எதிராக எந்த குற்றப் பதிவும் இல்லை. மேலும் போதைப் பழக்கமும் அவருக்கு இல்லை என்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைக்காக அந்த ஓட்டுநர் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் மே 7 ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் சொன்னார்.


