கோலாலம்பூர், மே 1 - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த தொழிலாளர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நல்வாழ்வின் முதுகெலும்பாகச் செயல்படும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடப்பாட்டிற்கு நாட்டின் மனமார்ந்த பாராட்டுகளை அரச தம்பதியர் தெரிவித்துக்கொள்வதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நாம் அனுபவிக்கும் முன்னேற்றத்திற்கு உழைப்பாளர்கள் சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையும் அடித்தளமாகும். உங்கள் சேவைக்கு நன்றி என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் கூறினார்.
இந்த ஆண்டு தொழிலாளர் தின கொண்டாட்டம் 'பெக்கெர்ஜா கெசுமா பங்சா' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.
தேசிய அளவிலான நிகழ்வு இன்று புக்கிட் ஜாலில் உள்ள அக்ஸியாத்தா அரங்கில் நடைபெறுகிறது. பல்வேறு தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.


