புதுடில்லி, மே 1 - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா நேற்று பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
இந்தத் தடை ஏப்ரல் 30 முதல் மே 23 வரை நீடிக்கும் என்று இந்திய அரசு ஒரு அறிவிப்பில் கூறியது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் நேற்று மாலை நடத்திய தொலைபேசி சந்திப்பில், இந்த சம்பவத்தில் பாகிஸ்தானை இணைக்கும் இந்தியாவின் முயற்சிகளை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார் என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
வெளிப்படையான, நம்பகமான மற்றும் நடுநிலையான விசாரணைக்கு கோரிக்கை விடுத்த அவர், வார்த்தைகளைக் குறைத்து பொறுப்புடன் செயல்பட இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் இந்த கருத்து தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு உடனடியாக பதிலளிக்கவில்லை.
இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி கோலாலம்பூருக்கு மட்டும் பயணச் சேவையை பாகிஸ்தான் விமான நிறுவனம் மட்டுமே வழங்குவதால் இந்தத் தடையால் பாகிஸ்தானின் விமானத் துறையில் ஏற்படும் தாக்கம் இந்தியாவை விடக் குறைவாகவே இருக்கும்.
பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இயக்கப்படும் விமானங்கள் பயன்படுத்த கடந்த வாரம் தடை விதித்தது.
மூன்றாம் நாடுகள் வழியாக உட்பட அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்ததோடு இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தெற்காசிய விசாக்களையும் முடக்கியது.
கடந்த ஏப்ரல் 29 முதல் அதிகரித்து வரும் இருதரப்பு பதற்றங்களைத் தொடர்ந்து இந்திய வான்வெளியைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தேசிய விமான நிறுவனமான பி.ஐ.ஏ. கூறியது.
சுற்றுலாப் பயணிகள் மீதான கோரத் தாக்குதலைத் தொடர்ந்து அணு ஆயுதம் ஏந்திய அந்த அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா விரைவில் இராணுவ நடவடிக்கையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக "நம்பகமான உளவுத்துறை" கூறி இருப்பதாக பாகிஸ்தான் நேற்று கூறியது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரில் வன்முறைக் கிளர்ச்சியை நடத்தும் "பயங்கரவாதிகள்" என கூறப்படும் இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூன்று தாக்குதல்காரர்களை இந்தியா அடையாளம் கண்டுள்ளது.


