ஷா ஆலம், மே 1- புரிந்துணர்வை அதிகரிப்பதற்கும் நிறுவனங்களின்
மதிப்பைக் கூட்டுவதற்கு ஏதுவாக முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள்
மத்தியில் ஒத்துழைப்பும் சகிப்புத்தன்மையும் பேணிக்காக்கப்படுவது
அவசியமாகும்.
எந்தவொரு ஸ்தாபனமும் தரத்தை உயர்த்தி வெற்றியை ஈட்டுவதற்கு இது
முக்கிய அம்சமாக விளங்குவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
பண நெருக்கடி உள்பட பிரச்சினைகளை எதிர்நோக்கும்
தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு
உள்ள பிரச்சினைகளை முதலாளிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே சமயம், தொழிலாளர்களும் முதலாளிகளின் பரிவை தங்களுக்குச்
சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. அவர்களும் தங்கள் பணிகளை
முறையாக ஆற்றி வர வேண்டும் என தொழிலாளர் தினத்தை முன்னிட்டு
மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டார்.
நாட்டில் குறிப்பாக, சிலாங்கூரிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும்
தனது தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர்,
அரசாங்கம் வழங்கி வரும் குறுகியகால பயிற்சிகளில் தங்கள்
தொழிலாளர்கள் பங்கேற்பதற்கு முதலாளிகள் அனுமதிக்க வேண்டும்
எனக் கேட்டுக் கொண்டார்.
இத்தகைய முயற்சிகள் தொழிலாளர்களின் திறமையைப் பட்டைத் தீட்டும்
அதேவேளையில் நிறுவனமும் தொடர்ந்து வளர்ச்சி காண உதவும் என்றார்
அவர்.
மாநில அரசு பல்வேறு குறுகிய கால பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு
செய்து வருகிறது. முதலாளிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்
கொள்வதன் மூலம் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு
வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.


