கோல திரங்கானு, மே 1- போதைப் பொருள் விற்பனையின் வழி
பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 981,500 வெள்ளி மதிப்பிலான மூன்று
கார்கள், ரொக்கம் மற்றும் தங்க ஆபரணங்களை திரங்கானு மாநில
போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி 32,000 வெள்ளி மதிப்புள்ள 1.02 கிலோ ஷாபு
போதைப் பொருளுடன் உள்நாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டதைத்
தொடர்ந்து இந்த சொத்து பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக
திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ முகமது கைரி கைருடின்
கூறினார்.
அழகு சாதன விற்பனை மையத்தின் உரிமையாளருமான அந்த 35 வயது
ஆடவர் இங்குள்ள கம்போங் பாயா கெலாடியில் உள்ள செயல்படாத
வளாகம் ஒன்றில் இரவு 8.40 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில்
கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் டோயோட்டா
அல்பார்ட், மினி கூப்பர் கன்ட்றிமேன் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகிய
கார்கள், 7,700 வெள்ளி ரொக்கம் மற்றும் தங்க நகைகள் ஆகியவையும்
அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இச்சோதனையின் போது அவ்வாடரிடமிருந்து 1.02 கிலோ எடையுள்ள
ஷாபு அடங்கிய பச்சை நிற பிளாஸ்டிக் பொட்டலம் ஒன்று கண்டு
பிடிக்கப்பட்டது என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
தெரிவித்தார்.
அந்த ஆடவருக்கு முந்தையக் குற்றப்பதிவுகள் ஏதும் இல்லை. எனினும்,
அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் நிமேதாஸெபம் எனும்
போதைப் பொருளை அவர் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது
என்றார் அவர்.
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக அவ்வாடவர் ஏப்ரல் 29 முதல்
மே 5 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய இதர
உறுப்பினர்களை கண்டறியும் முயற்சியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு
வருவதாக அவர் கூறினார்.


