சிரம்பான், மே 1- சீனாவில் செயல்படுவதாகக் கூறப்படும் தொடர்பு, தொழிலியல் மற்றும் எண்ணெய் தொடர்புடைய பங்கு முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்ற தனியார் நிறுவன பணியாளர் ஒருவர் 31 லட்சம் வெள்ளியை இழந்தார்.
ஐம்பது வயதுடைய அந்த நபர் இந்த முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்காக பல நபர்களுடன் வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொண்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஹாத்தா சே டின் கூறினார்.
இந்த முதலீட்டு நோக்கத்திற்காக பாதிக்கப்பட்ட நபர் அந்த புலனக்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்ட வேளையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் அதில் முதலீடு செய்யத் தொடங்கியதாக அவர் சொன்னார்.
முதலீடு தொடர்பான விபரங்கள் மற்றும் பெறப்பட்ட லாபம் தொடர்பான தகவல்களை வழங்கக் கூடிய செயலி ஒன்றிலும் அந்த நபர் பதிவு செய்து கொண்டதாக முகமது ஹாத்தா நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த முதலீட்டு நடவடிக்கைக்காக அந்த நபர் நிறுவனங்களின் பெயரில் திறக்கப்பட்டிருந்த நான்கு வங்கிக் கணக்குகளில் 34 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தைச் செலுத்தியுள்ளார்.
எனினும், லாபத் தொகையை மீட்க இயலாமல் போனதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவ்வாடர் இது குறித்து கடந்த மாதம் 17ஆம் தேதி போலீசில் புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


