கோலாலம்பூர், மே 1- தேசிய நிலையிலான 2025 தொழிலாளர் தினம் இன்று புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரேனாவில் இன்று அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சங்கங்கள், அரசு நிறுவனங்கள், அரசாங்க மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைக்கக் கூடிய இந்த தொழிலாளர் தின நிகழ்வு ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி நடத்தப்படுகிறது.
மலேசியா மடாணி கோட்பாட்டிற்கு ஏற்ப நாட்டின் மேம்பாட்டிற்கு தோள் கொடுத்து அளப்பரிய பங்கினை ஆற்றி வரும் உழைப்பாளர் வர்க்கத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
நாட்டிற்கு முதுகெலும்பாகவும் நீதி மற்றும் சுபிட்சத்தை நிலைநாட்டுவதில் முக்கிய பங்களிப்பையும் வழங்கி வரும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையிலான இந்த கொண்டாட்டம் இவ்வாண்டு ‘பெகெர்ஜா கெசுமா பங்சா’ எனும் கருப்பொருளில் நடத்தப்படும்.
இந்த தொழிலாளர் கொண்டாட்ட நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கிய உரை நிகழ்த்துவார். மடாணி தொழிலாளர் அட்டை மற்றும் மைபியூச்சர் ஜோப்ஸ் விவேக கைபேசி செயலி ஆகிய முன்னெடுப்புகளையும் பிரதமர் இன்று அறிமுகப்படுத்துவார்.
இந்த நிகழ்வின் சிறப்பு அங்கமாக சிறந்த தொழிலாளர், முதலாளி, தொழிற்சங்கம், ஊடகத்திற்கு விருதுகள் வழங்கப்படும். இது தவிர, பொதுச் சேவை தேசிய சிறந்த ஊழியர் விருது (உயர் நிர்வாகம்) மற்றும் சிறந்த ஊடக விருது (நிறுவனம்) ஆகிய இரு சிறப்பு கௌரவிப்பு நிகழ்வுகளை மனிதவள அமைச்சு இவ்வாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.


