புத்ராஜெயா, ஏப். 30- மொத்தம் 36 கோடி வெள்ளியை உட்படுத்திய போலி பணக் கோரிக்கை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட நபர் உள்பட நால்வர் மே 3ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) புத்ரா ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை செய்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் இர்ஸா ஜூலைக்கா புர்ஹானுடின் இந்த தடுப்புக் காவல் அனுமதியை வழங்கினார்.
ஐம்பது முதல் எழுபது வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட அந்த நான்கு சந்தேக நபர்களும் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று எம்.ஏ.சி.சி. தலைமையகம் வந்த போது கைது செய்யப்பட்டதாக வட்டாரம் ஒன்று கூறியது.
அந்த நான்கு சந்தேக நபர்களும் கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இக்குற்றத்தைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் 130 கோடி வெள்ளி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட சுக்குக் நிதியில் இந்த போலி பணக் கோரிக்கையை அவர்கள் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோஸ்ரீ அகமது குசைரி யாஹ்யா, இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.


