கோலாலம்பூர், ஏப். 30- இம்மாதம் 1 ஆம் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை பழுதுபார்க்க 4 கோடியே 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார். ![]()
இந்த பேரிடரில் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடைகளை சேகரிக்கும் நோக்கில் தனது அமைச்சினால் அமைக்கப்பட்ட தேசிய பேரிடர் அறக்கட்டளை நிதியிலிருந்து நான்கு கோடி வெள்ளி பெறப்பட்டதாக அவர் கூறினார்.
எஞ்சிய 60 லட்சம் வெள்ளி சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் ஊராட்சி மற்றும் தேசிய வடிவமைப்புத் துறை வாயிலாக பொது உள்கட்டமைப்பு மீட்புப் பணிகளை மேற்கொள்ள
மடாணி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது என அவர் சொன்னார்.
தாமான் புத்ரா ஹார்மோனியின் அசல் மேம்பாட்டாளராக சைம் டார்பி புரொப்பர்ட்டி நிறுவனம் உள்ளதால் அசல் வரைபடத்தின் அடிப்படையில் வீடுகளை மீண்டும் கட்டுவதில் உதவுவதற்கு மிகவும் பொருத்தமான தரப்பாக அது விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், சரிக்காட் பெருமஹான் நெகாரா நிறுவனம் கம்போங் கோல சுங்கை பாருவில் புனரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தும் என்று அவர் இன்று ஷா ஆலமில் உள்ள மாநில செயலக கட்டிடத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக அவர், புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வாடகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் பங்கேற்றார்.
பாதிக்கப்படப் பகுதியில் முழு மறுசீரமைப்பு பணிகள் முடிவடைய 24 மாதங்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. சேதத்தின் அளவைப் பொறுத்து மறு நிர்மாணிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 40 சதவீதத்திற்கும் அதிகமான சேதம் உள்ள வீடுகளுக்கு மறுகட்டமைப்பு வழங்கப்படும் உச்சவரம்பு தொகை 300,000 வெள்ளியாகும்.
40 சதவீதத்திற்கும் அதிகமாக சேதம் ஏற்பட்ட ஆனால் மீண்டும் கட்ட வேண்டிய அவசியமில்லாத வீடுகளுக்கு 150,000 வெள்ளி ஒதுக்கப்படுகிறது. அதே நேரத்தில் 40 சதவீதத்திற்கும் குறைவான சேதம் உள்ள வீடுகளுக்கு அதிகபட்சமாக 30,000 வழங்கப்படும் என ஙா சொன்னார்.


