ஷா ஆலம், ஏப். 30- இம்மாதம் 1ஆம் ஏற்பட்ட எரிவாயு குழாய்
வெடிவிபத்து தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை அடுத்த மாதத்தில்
தயாராகும்.
கடுமையான மழை காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும்
இந்த விசாரணைக்கு தலைமையேற்றுள்ள வேலையிட பாதுகாப்பு
மற்றும் சுகாதாரத் துறையின் (டோஷ்) தலைமையிலான விசாரணைக்
குழு தங்கள் பணியை திட்டமிட்டப்படி மேற்கொண்டு வருகிறது என்று
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த விசாரணையை முடிப்பதற்கு வேலையிட பாதுகாப்பு மற்றும்
சுகாதாரத் துறைக்கு இன்னும் ஒரு மாதம் தேவைப்படும் என
எதிர்பார்க்கிறோம். பின்னர் அந்த விசாரணை அறிக்கை அமைச்சரவை
மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று
அவர் சொன்னார்.
இன்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற
புத்ரா ஹைட்ஸ் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வாடகை
வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங்கும் கலந்து கொண்டார்.
பாதிக்கப்பட்ட பகுதியின் பல பகுதிகளில் போடப்பட்டிருந்த சாலைத்
தடுப்புகள் அகற்றப்பட்ட வேளையில் டோஷ், தொழில்நுட்ப குழுவினர்,
பாதுகாப்பு படைகளின் வசதிக்காக பிரதான நுழைவாயிலில் இன்னும்
பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
அவசியம் ஏற்பட்டால் இந்த சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை
அறிக்கை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் எனக் கூறிய அவர்,
இந்த விசாரணை வெளிப்படையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய
அரசாங்கம் சுயேச்சை விசாரணை குழுவை அமைதுள்ளது என்றார்.


