ஷா ஆலம், ஏப்.30 - புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு வாடகையாக வழங்க 27 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 455 குடும்பங்களுக்கும் மூன்று மாத வீட்டு வாடகையாக தலா 6,000 வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதுவரை மூன்று கட்டங்களாக வழங்கப்பட்ட வீட்டு வாடகையை 214 குடும்பங்கள் பெற்றுள்ளன. மற்றவர்களிடமிருந்து அடையாளக் கார்டு உள்ளிட்ட ஆவணங்களப் பெறுவதற்கு காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
தொடக்கத்தில் மூன்று மாத வாடகைத் தொகையை வழங்குகிறோம்.
காரணம், அதற்கும் குறைவான காலக்கட்டத்தில் சில குடியிருப்புகளை சரி
செய்யப்பட்டு விடும் என அவர் சொன்னார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாகியும் வீடுகள் சரிசெய்யப்படாமல் அல்லது
மறுநிர்மாணிப்பு செய்யப்படாமலிருந்தால் அவர்களுக்கான வீட்டு
வாடகையை அரசு அவர்களுக்கு வழங்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.
சிறிய அளவில் பாதிப்புகள் அதாவது சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 30,000 வெள்ளிக்கும் குறைவாகத் தேவைப்படக்கூடிய குடியிருப்பாளர்கள் சொந்த செலவில் வீடுகளைச் சரி செய்து கொள்ளலாம்.
பின்னர் அவர்கள் அந்த தொகையை பெற ஊராட்சி மன்றங்கள் அல்லது கிராமத் தலைவர்களிடம் விண்ணப்பிக்கலாம் என்று அவர் இன்று மாநில அரசு தலைமைச் செயலகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வாடகையை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
வீடுகளை பழுதுபார்த்ததற்கான தொகையைத் திரும்பப் பெற அவர்கள்
ஊராட்சி மன்றங்களிடம் அல்லது கிராமத் தலைவர்களிடம் விண்ணப்பிக்கலாம். பின்னர் அந்த விண்ணப்பங்கள் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
முழுமையாக அழிந்த வீடுகளை மறுநிர்மாணிப்பு செய்யும் பணியை அந்த
வீடமைப்புத் திட்டத்தின் மேம்பாட்டாளரான சைம் டார்பி நிறுவனம்
மேற்கொள்ளும். அதே சமயம் கம்போங் கோல சுங்கை பாரு குடியிருப்புகளை நிர்மாணிக்கும் பணியை எஸ்.பி.என்.பி. நிறுவனம் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.


