கோலாலம்பூர், ஏப்ரல் 30 - நேற்று கோலாலம்பூர், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்திற்கு மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹமட் முய்சு, வருகைப் புரிந்தார். அவர் மலேசியாவிற்கு நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை மணி 9.30 க்கு வருகைத்தந்த அதிபர் குழுவினரை, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹம்ட் மற்றும் மலேசிய பெட்ரோலிய நிர்வாகத்தின் மூத்த உதவித் தலைவர் டத்தோ பாச்சோ பிலோங் ஆகியோர் வரவேற்றனர்.
அவ்விடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாலத்தீவு அதிபர் நேரத்தை செலவிட்டார். அவர் முதல் மற்றும் இரண்டாம் கோபுரத்தை இணைக்கும் பாலமான Skybridge KLCC-ஐயும், இரு கோபுரங்களில் உள்ள கண்காணிப்பு தளத்தையும் பார்வையிட்டார்.
உலகின் மிக உயரமான இரட்டை கோபுரத்தின் கட்டிடக் கலையின் வரலாறு குறித்து அதன் சுற்றாலா நிர்வகிப்பு சேவை நிர்வாகி சாஃபுல் பஹாரி டின், முய்சுவுக்கு விளக்கினார்.
இதற்கு முன் இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்குப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இரண்டு பரிமாற்றக் குறிப்புகளையும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முய்சு ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
பெர்னாமா


