கோலாலம்பூர், ஏப். 30 - கடந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காஜாங் மற்றும் செராஸில் மேற்கொள்ளப்பட்ட மூன்று அதிரடிச் சோதனைகளில் மூன்று சகோதரர்களைக் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 கோடியே 20 லட்சம் வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையின் வாயிலாக அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் காஜாங், தாமான் நடாயுவில் உள்ள மூன்று மாடி வீட்டில் நடந்த முதல் சோதனையில் அக்கும்பலின் மூளையாக செயல்பட்ட மூன்று உள்ளூர்வாசிகளை தாங்கள் கைது செய்ததாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டிசிபி மாட் ஜானி @ முகமட் சலாவுடின் சே அலி தெரிவித்தார்.
இந்த சோதனையின் போது 27 முதல் 39 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களும் போதைப்பொருட்களை பொட்டலமிடுவதில் மும்முரமாக இருந்தனர். மேலும் அச்சோதனையில் 830 பிளாஸ்டிக் பொட்டலங்கள், 56 பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒரு பிளாஸ்டிக் பேசின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்திலும் ஷாபு உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களைப் பொட்டலமிடும் உபகரணங்கள் இருந்தன என்று அவர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அந்த மூன்று நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பயனாக செராஸில் உள்ள இரண்டு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் மறுநாள் அதிகாலை 1.15 மணி மற்றும் 1.50 மணி அளவில் சோதனை நடத்தப்பட்டன என்று மாட் ஜானி தெரிவித்தார்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 95 கெத்தமின் பாக்கெட்டுகள், மெத்தம்பெத்தமின் அடங்கிய மூன்று பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் எக்ஸ்டசி பவுடர் அடங்கிய 81 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 2.165 டன் ஆகும். இவற்றில் 1,986 கிலோகிராம் ஷாபு, எக்ஸ்டசி பவுடர் (82 கிலோ) மற்றும் கெத்தமின் (97 கிலோ) ஆகியவையும் அடங்கும். இதன் சந்தை மதிப்பு 8 கோடியே 21 லட்சத்து 40 வெள்ளியாகும் என்று அவர் சொன்னார்.
1988 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்குச் சொந்தமான 95,000 மதிப்புள்ள நான்கு கார்களை தாங்கள் கைப்பற்றியதாகவும் மாட் ஜானி கூறினார்.
அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39(பி) பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் மே 1 வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


