கோலாலம்பூர், ஏப்ரல் 30 - 2024 எஸ்பிஎம் தேர்வில் 5Aக்கு மேல் பெற்ற பூர்வக்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க மாராவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டும் விதமாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"இந்த முயற்சி பூர்வக்குடியினரின் குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று தாம் நம்புவதாக அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மொத்தம் 1,932 பூர்வக்குடி மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியதாகவும் அதில் 87 மாணவர்கள் 5ஏக்களுக்கும் மேல் பெற்றதாக தமது முகநூல் பதிவில் பகிரப்பட்ட ஒரு காணொளி மூலம் சாஹிட் ஹமிடி கூறினார்.
மாரா கல்வி நிறுவனங்களில் (IPMA) தங்கள் படிப்பைத் தொடர உதவுவதற்காகவே இந்த முழு உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
“கோலாலம்பூர் பல்கலைக்கழகம் (UniKL), மலேசியா பாலி-டெக் பல்கலைக்கழகம் (UPTM), ஜெர்மன்-மலேசிய நிறுவனம் (GMI) மற்றும் மாராவின் கீழ் உள்ள பிற உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர அம்மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்,” என்றார் அவர்.
மாரா உயர்க்கல்வி கழகங்களில் தங்களின் மேற்படிப்பைத் தொடர இந்த உபகாரச் சம்பளம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர் விளக்கினார்.
பெர்னாமா


