கோலாலம்பூர், ஏப். 30 - கனடாவின் கூட்டரசுத் தேர்தலில் வெற்றி பெற்ற கனடியப் பிரதமர் மார்க் கெர்னிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் கனடாவின் புதிய அத்தியாயத்தைக் குறிப்பதோடு நிச்சயமற்ற காலங்களில் சுதந்திரம், மீள்தன்மை மற்றும் கொள்கை ரீதியான தலைமைத்துவத்திற்கான நாட்டின் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவத்திற்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்தம் உட்பட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பிரதமர் மார்க் கெர்னியுடன் அணுக்கமாகப் பணியாற்றுவதற்கு நான் காத்திருக்கிறேன் என அவர் சொன்னார்.
பகிரப்பட்ட செழிப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான உந்துசக்தியாக அனைத்துலக வர்த்தகத்தை உலகம் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மார்க் கெர்னியின் தலைமையின் கீழ் கனடா ஆக்கபூர்வமான அனைத்துலக ஈடுபாட்டிற்கான வலுவான மற்றும் உறுதியான குரலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
கனடியத் தேர்தலில் வெற்றி பெற்றதன் வழி கெர்னியின் லிபரல் கட்சி மீண்டும் ஒரு தவணைக்கு அந்நாட்டை ஆட்சி செய்யும்.


