ஷா ஆலம், ஏப். 30 - இங்குள்ள செக்சன் 13 இல் நேற்று மாலை கத்தி முனையில் கடத்துவதற்கு நடத்தப்பட்ட முயற்சியிலிருந்து பதின்ம வயது இளைஞர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர்த் தப்பினார்.
நேற்று மாலை 5.15 மணியளவில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் அந்தப் பகுதியில் தனியாக ஜாகிங் மெதுவோட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பயணித்த கார் அவரை வழி மறித்ததாக ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
கடத்தல்காரர்களில் ஒருவன் பாதிக்கப்பட்டவரை நோக்கி கத்தியை காட்டி காரில் ஏறச் சொன்னார்.
கடத்தல்காரனின் உத்தரவுக்கு கீழ்படிய மறுத்த அந்த 15 வயது இளைஞர் சந்தேக நபருடன் போராடி தன்னை விடுவித்துக் கொண்டு உதவி பெற அருகிலுள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் சாவடி நோக்கி ஓடினார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் அந்த இளைஞரின் வலது கன்னத்திலும் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த கடத்தல் முயற்சி குறித்து தகவல் தெரிந்தவர்கள் குற்றப் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது சப்ரி அப்துல் ராணியை 017-2892628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது என்று இக்பால் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 363/511 (கடத்தல்) மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 (தாக்குதல் ஆயுதத்தால் காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.


