(ஆர்.ராஜா)
பந்திங், ஏப். 29 - கோல லங்காட், ஜாலான் சுங்கை புவாயா, செர்டாங் பிளாஸில் மக்களின் வசதிக்காக 50 லட்சம் வெள்ளி செலவில் மின்சுடலை அமைக்கப்படவுள்ளது.
இந்த மின்சுடலையை கோல லங்காட் நகராண்மைக் கழகம் கோல லங்காட் ஜாலான் சுங்கை புவாயா, செர்டாங் பிளாஸில் உள்ள ஆறு ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் நிர்மாணிக்கவிருக்கிறது.
இந்த மின்சுடலை கட்டுமானத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து சீக்கிய மற்றும் தோயிஸம் (லீமாஸ்) சமயங்களுக்கான செயல்குழுவின் இணைத் தலைவரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான இங் ஸீ ஹான் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், வீடமைப்பு மற்றும் கலாசாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா, கோல லங்காட் நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது,கோல லங்காட் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் இராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதன் வழி மின்சுடலையைப் பெறுவதற்கான இவ்வட்டார மக்களின் 27 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாக ஹரிதாஸ் கூறினார்.
இங்கு மின்சுடலை அமைப்பதற்கு ஏற்கனவே மூன்று முறை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பல்வேறு தரப்பினரின் மெத்தனம் காரணமாக திருப்பி அனுப்பட்ட நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகக் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தாம் பெரும் முயற்சி எடுத்து வந்ததாக கோல லங்காட் பிகேஆர் தொகுதியின் முன்னாள் தலைவருமான அவர் சொன்னார்
மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் கவனத்திற்கு இவ்விவகாரத்தை பல முறை கொண்டுச் சென்றதன் பலனாக இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டு கடந்தாண்டு இறுதியில் குத்தகைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த மின்சுடலையின் கட்டுமானப் பணிகள் 18 மாத காலத்தில் அதாவது வரும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று தகன மேடைகளைக் கொண்ட இந்த மின்சுடலையில் இரு தகன மேடைகள் பயன்பாட்டிலும் ஒரு தகன மேடை தயார் நிலையிலும் வைக்கப்பட்டிருக்கும் என்றார் அவர்.
கோல லங்காட் நகராண்மைக் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த மின்சுடலையில் தகனம் செய்வதற்கான கட்டணமாக 200 வெள்ளி வசூலிக்கப்படும் எனக் கூறிய ஹரிதாஸ், இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லீம் அல்லாத பிற இனத்தினரும் இதனைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
இத்திட்டம் பூர்த்தியானவுடன் சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்களால் நிர்வகிக்கப்படும் ஆறாவது மின்சுடலையாக இது விளங்கும். தற்போது கிள்ளான் அரச மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சிப்பாங் நகராண்மைக் கழகம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றம் ஆகிய ஊராட்சி மன்றப் பகுதிகளில் மின்சுடலைகள் செயல்படுகின்றன.


