ஷா ஆலம், ஏப். 29- கடந்தாண்டு முழுவதும் 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தையின் வழி 3,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாயப்பு கிட்டியது.
வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் உயர் பதவி மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகள் மற்றும் நிலைகளை உள்ளடக்கியுள்ளன என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்..
கடந்தாண்டில், 5,000 க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை வாய்ப்புச் சந்தையில் கலத்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் முன்னாள் குற்றவாளிகளுக்காக சிறப்பு வேலை வாய்ப்பு சந்தையையும் நாங்கள் ஏற்பாடு செய்தோம்.
ஒட்டுமொத்தமாக, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 267 முதலாளிகளை உள்ளடக்கிய 40,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் வேலை தேடுவோருக்கு வழங்கப்படுகின்றன என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இவ்வாண்டும் அதே திட்டம் ஒன்பது மாவட்டங்களில் தொடர்கிறது. இத்திட்டத்தின் வழி 40,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வேலை வாய்ப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்ட முதல் மாவட்டமாக கோம்பாக் விளங்குகிறது. இதில் 13,000 வெள்ளி வரை சம்பளம் வழங்கும் தொழில் உள்பட பல்வேறு துறைகளில் 4,318 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
மொத்தத்தில், 3,074 காலியிடங்கள் மாதத்திற்கு குறைந்தபட்ச அளவான 2,000 வெள்ளிக்கும் அதிகமான சம்பளத்தை வழங்குகின்றன என அவர் சொன்னார்.
வரும் மே மாதம் 24ஆம் தேதி பெட்டாலிங் மாவட்ட நிலையிலான
ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற SS3 பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறுகிறது.


