கோலாலம்பூர், ஏப். 29 - எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து
மியான்மர் பிரஜைகளுக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க
மலேசியாவும் வியட்னாமும் ஒருமனதாக இணக்கம் தெரிவித்துள்ளன.
வியட்னாம் பிரதமர் பாம் மின் சின்னுடன் இன்று தாம் நடத்திய
சந்திப்பின் போது இந்த இணக்கம் காணப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதன் அடிப்படையில் அனைத்து மனிதாபிமான உதவிப் பணியாளர்களின்
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் போர்
நிறுத்தத்தைத் தொடர வேண்டும் என்று அவர் நேற்று தனது பேஸ்புக்
பக்கத்தில் வெளியிட்டப் பதிவில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறைவிடம், சுத்தமான குடிநீர் சுகாதார மற்றும்
மருத்துவ வசதிகள் உடனடியாகத் தேவைப்படுவதாக அனைத்துலக
செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கம் கடந்த மார்ச் மாதம் மிக
மோசமான பூகம்பம் ஏற்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு கூறியிருந்தது.
மியான்மர் விவகாரம் தவிர்த்து அமெரிக்கா அண்மையில் விதித்த
வர்த்தக வரி தொடர்பான சமீபத்திய மேம்பாடுகள் மற்றும் ஆசியானின்
கூட்டு நடவடிக்கை குறித்தும் தாங்கள் விவாதித்தாக அன்வார் அப்பதிவில்
கூறினார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கருத்துரைத்த பிரதமர், இரு
நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை தரக்கூடிய தீர்வினைக் காண்பதற்காக
மலேசியாவின் பிரதிநிதியாக முதலீடு,வர்த்தகம் மற்றும் தொழிலியல்
அமைச்சரை (தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள்) மலேசியா அனுப்பும் என்று
குறிப்பிட்டார்.
ஆசியான் தலைவர் என்ற முறையில் இவ்விவகாரம் மீது கவனம்
செலுத்தும்படி மலேசியா அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பரஸ்பர வரி விவகாரத்திற்கு நல்ல தீர்வை காண்பதற்கு ஆசியான் நாடுகள் இரு தரப்பு உறவு செயல்முறையைப் பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.


