கோல திரங்கானு, ஏப். 29 - ஈராண்டுகளுக்கு முன்னர் ஷரியா இணக்க
பங்கு கொள்முதல் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனத்தில் முதலீடு செய்த
முன்னாள் எண்ணெய் துரப்பண மேடைப் பணியாளர் ஒருவர் தனது
சேமிப்புத் தொகையான 109,500 வெள்ளியை இழந்தார்.
இந்த முதலீட்டுத் திட்டம் குறித்த விபரங்களை பாதிக்கப்பட்ட 57 வயதான
நபரிடம் அவரின் நண்பர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி
எடுத்துரைத்ததாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
அஸ்லி முகமது நோர் கூறினார்.
முதலீடு செய்யப்படும் தொகையின் அடிப்படையில் லாபம் தரக்கூடிய
பல்வேறு முதலீட்டுத் தொகுப்புகளை அந்நிறுவனம் வழங்கியதாக
பாதிக்கப்பட்ட நபர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று அவர்
சொன்னார்.
ஆண்டுக்கு 18 விழுக்காடு வீதம் மூன்றாண்டுகளுக்கு லாபம்
வழங்கக்கூடிய இத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர் 150,000 வெள்ளியை
முதலீடு செய்தார். மாதம் 6,700 வெள்ளி வீதம் மூன்றாண்டுகளுக்கு லாபத்
தொகை வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடக்கத்தில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி கட்டங் கட்டமாக 40,500
வெள்ளி பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டதாக அஸ்லி முகமது
குறிப்பிட்டார்.
எனினும், கடந்தாண்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல் லாபத் தொகை
வழங்கப்படாததை அறிந்து பாதிக்கப்பட்ட நபர் அந்நிறுவத்தை தொடர்பு
கொண்ட போது பணம் வழங்கப்படாததற்கு பல்வேறு காரணங்கள்
கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் இது குறித்து போலீசில் புகார்
செய்ததாகக் கூறிய அவர், இந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின்
420வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


