புத்ராஜெயா, ஏப்ரல் 29 - கெடா, கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ILI எனப்படும் Influenza-வை ஒத்திருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என 28 பேரை மர்ம தொற்று தாக்கியுள்ளது. அவர்களில் 6 பேருக்கு Influenza A உறுதியானதாக, சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அவர்கள் சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். ILI அறிகுறிகள் காணப்பட்ட எஞ்சிய 22 பேரும் வெளிநோயாளிகளாக சிகிச்சைப் பெற்றனர்.
சுற்று வட்டாரத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமிட்ட இடத்தில் ஆபத்து மதிப்பீடு போன்ற கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் மாநில சுகாதாரத் துறைகள் எடுத்துள்ளன.
இது தவிர, நோய்க் கண்டறிதல், உடனடி சிகிச்சை, அறிகுறிகள் காணப்படுவோரைத் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக KKM கூறியது.
முன்னதாக, யானில் நடைபெற்ற முகாமிடுதல் நடவடிக்கையில் கலந்துகொண்டஇரண்டாம் படிவ மாணவருக்கு காய்ச்சல், வலது இடுப்பு வலி போன்ற உபாதை ஏற்பட்டது. அதே சமயம் பள்ளி ஊழியருக்கு காய்ச்சலுடன் சோர்வு, இருாமல், உடம்பு வலி ஏற்பட்டது.
இதை அடுத்து இருவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு Influenza இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது.
எனினும் இருவருக்கும் ஏற்பட்ட தொற்று இன்னமும் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


