சுங்கை பட்டாணி, ஏப்ரல் 29 - இன்று காலை கெடாவில் சுங்கை பட்டாணி, ஜாலான் தாமான் பெர்சாத்து அருகே அமைந்துள்ள ஓர் உணவகத்தில் கார் மோதியது. அதில் 55 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.
காலை 9 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், காலை உணவை உட்கொண்டிந்த போது, பெர்டுவா அல்சா கார் ஒன்று கடை வளாகத்திற்குள் நுழைந்து அவரை மோதியது.
68 வயதான அந்த வாகன ஓட்டுநர் ஜாலான் தாமான் பெர்சாத்துவில் உள்ள முச்சந்தியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இலேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி உணவகத்தில் நுழைந்துள்ளது. அச்சமயம் பாதிக்கப்பட்டவர் மீது மோதியதாகக் கோலா மூடா காவல்துறை தலைவர் வான் அசாருடின் வான் இஸ்மாயில் கூறினார்.
கைகள், கால்கள், முகம் மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, அந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கவனக்குறைவாகவோ அல்லது ஆபத்தானதாகவோ வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, இச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதோடு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது


