புக்கிட் மெர்தாஜம், ஏப். 29- இங்குள்ள செருக் தோக்குனில் உள்ள குடில்
ஒன்றில் முதியவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் ஐந்து
ஆடவர்களை போலீசார் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.
அந்த குடிலில் நிகழ்ந்த கைகலப்பில் 63 வயதுடைய முதியவர் ஒருவர்
படுகொலை செய்யப்பட்டது குறித்து நேற்று மாலை 3.22 மணியளவில்
தாங்கள் புகாரைப் பெற்றதாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் கூறினார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது உயிரிழந்த நபரும் இக்கொலையில்
தொடர்புடைய முக்கிய நபர் என சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர்
உள்பட ஐவரும் அந்த குடிலில் உரையாடிக் கொண்டிருந்ததாக அவர்
சொன்னார்.
உரையாடலின் நடுவே திடீரென வெளியேறிய சந்தேக நபர் கட்டையுடன்
மீண்டும் உள்ளே நுழைந்து பாதிக்கப்பட்ட முதியவரை பின்புறமிருந்து
தாக்கியுள்ளார்
அந்த முதியவர் நிலைதடுமாறி விழுந்த நிலையில் சந்தேகப் பேர்வழி
தன்னிடமிருந்த கத்தியைக் கொண்டு அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்
என்று ஹெல்மி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இத்தாக்குதலுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறிய சந்தேக நபர் பின்னர்
தலைமறைவானார். இந்த தாக்குதலில் உயிரிழந்த முதியவரின் உடல்
பரிசோதனைக்காக புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு கொண்டுச்
செல்லப்பட்டது என அவர் சொன்னார்.
சம்பவம் நிகழ்வதற்கு முன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருக்கும்
சந்தேகப் பேர்வழிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு
இக்கொலைக்கு காரணமாக இருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது என அவர் மேலும் கூறினார்.
கைதான அனைவரும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்னர் என்றார் அவர்.


