ஷா ஆலம், ஏப். 29- சிப்பாங் நகராண்மைக் கழகம் கடந்தாண்டு 245 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தது. சிலாங்கூரில் அதிக முதலீடுகளை ஈர்த்த மூன்றாவது ஊராட்சி மன்றமாக சிப்பாங் நகராண்மைக் கழகம் விளங்குகிறது.
மொத்தம் 18 திட்டங்களை உள்ளடக்கிய அந்த முதலீட்டு, ஊராட்சி மன்றங்களுக்கான மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (மீடா) மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது என்று நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவர் முகமது ஷா ஓஸ்மின் கூறினார்.
அதில் 230 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள் அந்நிய நேரடி முதலீட்டின் வாயிலாகவும் 15 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடு உள்நாட்டு முதலீடுகள் வாயிலாகவும் பெறப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
இந்த முதலீடுகளில் முதன்மையாக அமைந்தவை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், தரவு சேமிப்பு மையம், இரசாயன உற்பத்தி, பசுமைத் தொழில்நுட்பம் ஆகியவையாகும் என்றார் அவர்.
மீடா வெளியிட்ட தரவுகளின் படி சைபர் ஜெயாவில் 54.4 கோடி வெள்ளி செலவில் 18 திட்டங்களும், சுங்கை பீலேக்கில் 3.4 கோடி வெள்ளி செலவில் இரு திட்டங்களும் சிலாங்கூர் சைன்ஸ் பார்க்கில் ஒரு கோடி வெள்ளி செலவில் ஒரு திட்டமும் சிப்பாங்கின் இதரப் பகுதிகளில் 180 கோடி வெள்ளி செலவில் மேலும் 10 திட்டங்களும் அமல்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.
தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த வட்டார மேம்பாட்டுப் திட்டத்திற்கும் (இட்ரிஸ்) சிப்பாங் நகராண்மைக் கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் நேற்று இங்கு நகராண்மைக் கழகத்தின் கூட்டத்திற்கு தலைமையேற்ற போது அவர் குறிப்பிட்டார்.
தொழில்துறை, தளவாடப் போக்குவரத்து, வீடமைப்பு, சுற்றுலா மற்றும் கல்வி சார்ந்த இந்த திட்டங்கள் வாயிலாக 1 டிரிலியன் வெள்ளி மதிப்பிலான நிகர மேம்பாட்டு மதிப்பை நகராண்மைக் கழகம் பதிவு செய்யும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


