அங்காரா, ஏப். 29- காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரத்
தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனர்களில் குறைந்தது 65
விழுக்காட்டினர் சிறார்கள், முதியோர் மற்றும் பெண்கள் என்று
காஸாவிலுள்ள அதிகாரிகளை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி
செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேலிய
இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் 18,000க்கும் மேற்பட்ட
சிறார்களும் 12,4000 பெண்களும் பலியாகியுள்ளதோடு 2,180 குடும்பங்கள்
முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்று காஸாவைத் தளமாகக் கொண்ட
அரசு ஊடக அலுவலகம் தெரிவித்தது.
மேலும், 5,070 குடும்பங்களில் ஒருவர் மட்டுமே உயிரோடு இருக்கும்
நிலையில் மற்ற அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் என்று அது
அறிக்கை ஒன்றில் கூறியது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 1,400 மருத்துவப் பணியாளர்கள், 212
செய்தியாளர்கள் மற்றும் 750 உதவிப் பணியாளர்களும் பலியாகியுள்ளனர்.
இந்த திட்டமிட்டப்பட்டத் தாக்குதல்கள் காரணமாக காஸாவில் மருத்துவ
வசதிகள் முற்றாகச் சீர்குலைந்துவிட்டது. அவர்கள் உண்மையை மறைக்க
முயன்று வருகின்றனர் என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.
காஸாவில் பொது மக்களின் குடியிருப்புகள் மீது வேண்டுமென்றே
குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதை கள நிலவரங்களும் இஸ்ரேலிய
போர் விமான விமானிகளின் வாக்குமூலங்களும் உளவுத் தகவல்களும்
உறுதிப்படுத்துகின்றன.
இன அழிப்பு மற்றும் மக்களை கூட்டங் கூட்டமாக கொன்று குவிக்கும்
இஸ்ரேலின் திட்டமிட்டக் கொள்கையின் வெளிப்பாடாக பொது மக்களின்
குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள் அமைந்துள்ளதை இது
உணர்த்துகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி
வரும் தாக்குதல்களில் இதுவரை 52,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


