கோலாலம்பூர். ஏப் 29- ஸ்தாப்பாக் தேசிய உயர்நிலைப் பள்ளியின் தங்கும்
விடுதி ஒன்றில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது.
இவ்விபத்து ஏற்பட்ட போது அதிலிருந்த அனைத்து 91 மாணவர்களும்
தொழுகைக்காக சூராவில் இருந்தால் எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி
அவர்கள் அனைவரும் தப்பினர்.
இந்த தீவிபத்து தொடர்பில் நேற்றிரவு 8.43 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து 40 தீயணைப்பாளர்கள் எட்டு வண்டிகளில்
சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கை கமாண்டர் ஜபாரி தாஜூடின் கூறினார்.
ஆண்களுக்கான தங்கும் விடுதியின் முதல் மாடியில் தீ ஏற்பட்டது. இரவு
9.40 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த
சம்பவத்தில் கட்டிடத்தின் 80 விழுக்காட்டுப் பகுதி சேதமடைந்தது என்று
அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
இந்த தீவிபத்தில் யாருக்கும் உயிருடற் சேதம் ஏற்படவில்லை எனக்
கூறிய அவர், தீக்கான காரணம் மற்றும் சேதம் குறித்து தீயணைப்புத்
துறையின் தடயவியல் பிரிவு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்றார்.
இதனிடையே, தீ ஏற்பட்டதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் தங்கள்
பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக உடனடியாக பள்ளிக்கு
விரைந்தனர்.


