ஷா ஆலம், ஏப். 29 - இங்குள்ள ஒரு நகைக் கடையில் வெ. 111,743.55 மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உள்நாட்டினரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடையின் விற்பனையாளரிடமிருந்து நேற்று அதிகாலை 4.55 மணிக்கு தங்களுக்கு புகார் கிடைத்ததாக ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 26) மாலை 4.00 மணிக்கு தங்கள் கடைக்கு வந்த ஒரு ஆடவரும் பெண்ணும் நகைகளை வாங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள் போல் பாசாங்கு காட்டினர் என்று அந்த விற்பனையாளர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று சொன்னார்.
பல்வேறு தங்க நகைகளை எடுத்து அவற்றைக் காண்பிப்பதில் புகார்தாரர் மும்முரமாக இருந்தபோது, பெண் சந்தேக நபர் அவரின் பார்வையில் படாமல் பல நகைகளை எடுத்து பதுக்கியுள்ளார்.
அந்த ஜோடி சென்ற பிறகுதான் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் புகார்தாரர் கவனத்தை திசைதிருப்பி சந்தேக நபர் பொருட்களை எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது என்று இக்பால் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
திருடப்பட்ட பொருட்களில் இரண்டு 916 தங்க மோதிரங்கள் மற்றும் மூன்று 916 தங்க வளையல்களும் அடங்கும். சுமார் 244.08 கிராம் எடையுள்ள இந்த தங்க நகைகளின் மதிப்பு 111,743.55 என அவர் தெரிவித்தார்.
சந்தேக நபரான ஆடவர் சிவப்பு தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தத வேளையில் பெண் வெள்ளை தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்ததாக இக்பால் கூறினார்.
சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாகத் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 380 பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இக்கொள்ளை தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 011-26394419 என்ற எண்ணில் குற்றப் புலனாய்வு உதவி அதிகாரி சார்ஜண்ட் பிரபாகரன் நாயரை தொடர்பு கொள்ளுமாறு இக்பால் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, ஷா ஆலமில் உள்ள ஒரு நகைக் கடையில் ஒரு ஆடவரும் பெண்ணும் வளையல்கள் மற்றும் மோதிரங்களைத் திருடுவதைச் சித்தரிக்கும் இரண்டு நிமிடங்கள் 26 வினாடிகள் கொண்ட சிசிடிவி காட்சி டிக்டோக்கில் வைரலானது.


