சிப்பாங், ஏப். 28 - மூன்றாண்டுகளுக்கு முன்னர் முகநூலில் ஆபாசமான கருத்துக்களைப் பதிவிட்டக் குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 3,000 வெள்ளி அபராதம் விதித்தது.
முகமது ஷாருலமின் அப்துல்லா (வயது 41) மற்றும் முகமது ரசூல் அப்துல் ரசாக் (வயது 44) ஆகியோர் தங்களுக்கு எதிரானக் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி அகமது ஃபுவாட் ஓத்மான் இத்தண்டனையை விதித்தார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, கடந்த 2022 டிசம்பர் 15 ஆம் தேதி முகநூலில் இதேபோல் ஆபாச கருத்துகளை வெளியிட்ட குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ள மற்றொரு நபரான 57 வயதான முகமட் நசீர் காடீர், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். அவரை 3,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம் வழக்கை மே 23 ஆம் தேதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இங்கிலாந்தில் பணிபுரியும் மலேசிய மருத்துவ நிபுணரின் பெண் குழந்தை குறித்து இணையதளத்தின் பதிவில் ஆபாசமான கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டை இரண்டு குற்றவாளிகளும் ஒப்புக்கொண்டனர்.
கடந்த 2022 டிசம்பர் 20ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஷாருலமினும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ரசூலும் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
இந்த வழக்கை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆனணய வழக்குரைஞர் நூர் நஜ்சிலா முகமது ஹாஷிம் நடத்தினார். அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் சார்பிலும் யாரும் ஆஜராகவில்லை.


