கோலாலம்பூர், ஏப். 28 - போலீஸ் அதிகாரி ஒருவரை எஸ் யு.வி. வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயன்றதாக ஒரு வர்த்தகர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நோரிடா ஆடம் முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டை வர்த்தகரான எம்.எம். ஸ்டீவன் (வயது 30) மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில் தாமான் செராஸ் அருகே இன்ஸ்பெக்டர் ஹஸ்லான் அலி அப்துல் ஹமீட்டை கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் மீது பெரோடுவா அருஸ் ரகக் காரை மோதியதாக ஸ்டீவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
ஸ்டீவனுக்கு ஜாமீன் வழங்க துணை அரசு வழக்கறிஞர் விவியன் யீப் பரிந்துரைக்கவில்லை. எனினும், தன் கட்சிக்காரர் தனது வயதான தாயைக் கவனிக்கும் கட்டாயத்தில் இருப்பதாலும் தலைமறைவாகும் அபாயம் இல்லாததாலும் அவரை குறைந்த பட்ச ஜாமீனில் விடுவிக்கும்படி ஸ்டீவன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரிபட்ஜித் சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
நீதிபதி நோரிடா ஆடம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் 10,000 ஜாமீன் வழங்கினார். இந்த வழக்கின் மறுவிசாரணை மே 28 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


