மணிலா, ஏப். 28 - மணிலாவின் தென்கிழக்கே உள்ள சோர்சோகன் மாநிலத்தின் புலுசான் எரிமலை 4.5 கிலோமீட்டர் உயரத்திற்கு காற்றில் அடர்த்தியான புகையைக் கக்கியதைத் தொடர்ந்து அந்த எரிமலைக்கான எச்சரிக்கை அளவை பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.
இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.36 மணி தொடங்கி 24 நிமிடங்கள் நீடித்த இந்த எரிமலை குமுறலுக்குப் பிறகு எச்சரிக்கை அளவு சுழியத்திலிருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டதாகப் பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
வெடிப்பு மையத்திலிருந்து 4.5 கிலோமீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல் மேற்கிலிருந்து தென்மேற்கு திசைக்கு பரவியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரித்துள்ள அந்த நிறுவனம், உள்ளூர்வாசிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு எரிமலையின் மையத்திலிருந்து 4 கிலோமீட்டர் வரையிலான ஆபத்து மண்டலத்திற்குள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தியது.
புலுசான் மலையின் சிகரத்திற்கு அருகில் பறப்பதைத் தவிர்க்குமாறு விமானிகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் தீவிரத் தன்மை கொண்ட 24 எரிமலைகள் உள்ளன. புலுசான் மலையைத் தவிர, அல்பே மாநிலத்தில் உள்ள மயோன் மலையும், மணிலாவிற்கு அருகிலுள்ள தால் மலையும் தற்போது எச்சரிக்கை நிலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் கன்லான் மலை எச்சரிக்கை நிலை மூன்றில் வைக்கப்பட்டுள்ளது.


